மாடுகளின் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை


அக்கா தமிழிசையின் புண்ணியத்தில் பாசிசம் என்ற வார்த்தைக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவருமே அர்த்தம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பாசிசம் என்பது பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அந்த வார்த்தைக்குள் மறைந்திருக்கும் பல கருத்துக்களும் கொடூரம் நிறைந்தவையே.

பாசிசத்தை விளக்குவதாக இருந்தால் நேரம் நீண்டு கொண்டே போகும். சுருக்கமாக சொல்வதென்றால்… மக்களுக்கு எதிராக சர்வாதிகார போக்கில் அமைக்கப்படும் அரசியல் கொள்கையே பாசிசம்.

பிஜேபி அரசின் கொள்கை மக்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. டிமானிட்டேஷன் இந்திய பொருளாதாரத்தை எந்த விதத்திலும் முன்னேற்றவில்லை. மாறாக வீழ்த்தியிருக்கிறது. ஒரே வரி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, எல்லாவற்றுக்குமான விலைகளை கூட்டியிருக்கிறதே தவிர குறைக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு. கேஸ் விலை உயர்வு. சமூக வலை தளங்களில் மக்கள் தங்கள் கருத்தை சொன்னால், அதை தடுக்கும் மிரட்டல் செயல்கள். தினசரி ஒரு சட்டம். சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு. இந்தியா வளர்கிறது என்று தொடர்ச்சியாக பொய் சொல்லிக் கொண்டிருப்பது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு. விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகள்.

நாளை விடியும்போது தங்களுக்கு எதிராக என்ன சட்டம் வரப்போகிறதோ என்ற பயத்திலேயே மக்கள் தூங்க செல்ல வேண்டிய நிலை தான் உள்ளது. இந்த நிலையில் மாணவி சோஃபியா, பிஜேபி தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் ‘பாசிச பிஜேபி ஒழிக…’ என்று கோஷமிட்டது மாபெரும் குற்றம் என்று தமிழிசை சொல்கிறார்.

சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். சோபியாவை கைது செய்ய வைத்திருக்கிறார். காவல் துறையும் உடனே கைது செய்திருக்கிறது. இதற்கு முன் ஃபேஸ்புக்கில் தமிழிசையை திட்டிய ஒரு பெண்ணை உடனே கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்று இன்னும் தெரியவில்லை. பத்திரிகைகளும் பொத்திக் கொண்டு இருக்கின்றன.

அடக்குமுறை – அடக்குமுறை – அடக்குமுறை. இதை பாசிசம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். ஒரு நாடே சொல்ல முடியாததை ஒரு பெண் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

இந்த ஆட்சியில் இந்தியர்கள் மன அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினசரி ஏதாவது ஒரு மக்களுக்கு எதிரான, முக்கியமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எதிரான செய்தி வந்து சேர்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, அதே மாவட்டத்தை சார்ந்த சோபியாவை பாதித்திருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் குரல் கொடுத்ததை சட்ட ரீதியாக பார்த்து கைது செய்தால், தமிழிசையையும் சேர்த்துத்தான் கைது செய்திருக்க வேண்டும்.

சோபியாவது ஒரு முறை குரல் கொடுத்தார். தமிழிசை விமான நிலையதில் அரை மணி நேரம் குழாயடி சட்டை போட்டிருக்கிறார். அதையெல்லாம் காவல்துறையோ, நீதிமன்றமோ கேள்வி கேட்வி கேட்கவில்லை.

இந்த நாடே சோபியாவுக்கு ஆதரவாக எழும்பவில்லையென்றால்… கைது செய்து காணாமல் அடித்திருப்பார்கள். இதற்கு முன் ஒரு பெண்ணை செய்தது போல.

தமிழிசை ஒரு பாசிசிஸ்ட் என்பது சில செயல்களில் தெரிகிறது. பிஜேபி பாசிச கட்சி என்பது பல செயல்களில் தெரிகிறது. இந்தியர்கள் மனநோயாளிகளாக மாறுவதற்கு முன், நோயை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

இங்கே மாடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மனிதர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

பாசிச பிஜேபி ஒழிக என்று பல தலைவர்கள் மற்றும் மக்களும் சொல்லிவிட்டார்கள். அதற்கு அக்கா தமிழிசை என்ன செய்ய போகிறார்? எல்லோரையும் தீவிரவாதி என்று சொல்லுவாரா?

தகுதி இல்லாதவர்கள் தலைவர்களாவது தமிழகத்தின் தலையெழுத்து.

Comments