ஒரு
வருடம் போனதே தெரியவில்லை என்றார் நண்பர். எல்லா புத்தாண்டிலும் ஏதோ ஒரு நண்பர் இப்படி
சொல்வது வழக்கம் தான்.
சிலர்
கடந்த வருடம் நிறைய இழந்தாகி விட்டது, அதை எல்லாம் இந்த வருடம் பெற்றாக வேண்டும் என்றனர்.
இன்னும் சிலர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மோசமாகி விடக் கூடாதே என்ற ஆச்சத்தில் இருந்தார்கள்.
ஒரு
சிலர் எதுவும் சொல்லவில்லை. புத்தாண்டு வாழ்த்துகளைக் கூட. அப்புறம் பல பின் பற்றப்
படாத அல்லது முடியாத புத்தாண்டு சபதங்கள். இனி தண்ணி அடிக்க மாட்டேன். தம் அடிக்க மாட்டேன்.
பொண்டாட்டியை அடிக்க மாட்டேன் என்பது போன்றவை.
எது
எப்படியோ… பலர் வேகம் வேகமாக மெரீனா கடற்கரைக்குப் போனார்கள். அங்கே போலீஸ் கமிஷ்னர்
கேக் வெட்டி கொண்டாடி யிருக்கிறார். மக்களுக்கும் கேக் கொடுத்திருக்கிறார். ஆனால்…
மக்கள்தான் தொடர்ந்து மெரீனாவில் இருக்க முடியவில்லை. இரவு பனிரெண்டரை மணிக்கெல்லாம்
கடற்கரையை விட்டுத் துறத்தியிருக்கிறார்கள் காவல் துறையினர்.
ஜல்லிக்கட்டுக்கு
உட்கார்ந்தது போல் உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது? இன்னொரு மெரீனா புரட்சி நடந்து
விடக்கூடாதே என்ற கவலை அவர்களுக்கு. கூலிகள் சிந்திப்பதில்லை. அதனால் அவர்கள் வேலையைச்
செய்கிறார்கள். அதோடு நிறுத்தாமல் நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோம் என்று வேறு சொல்கிறார்கள்.
எப்படியோ,
மெரீனா புரட்சியின் வாயிலாக மக்கள் மீது அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதை
குறைய விடாமல் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பது மக்களின் வெற்றிதான்.
இது தான் மக்கள் ஆட்சி.
எல்லா
புத்தாண்டைப் போலவே இந்த புத்தாண்டிலும் பலிகளும் காயங்களும் நடந்திருக்கிறது. 7 பேர்
பலி. 234 பேர் காயம். இதில் சும்மா இருந்தவர்களும், வேடிக்கைப் பார்க்கப் போனவர்களும்
உண்டு.
ஒரு
சில நண்பர்கள் நாங்கள் தமிழ் புத்தாண்டைத் தான் கொண்டாடுவோம். இது ஆங்கில புத்தாண்டு,
எங்களுக்கு வேண்டாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் மெரீனாவில் காயப்
படவில்லை. தமிழ் காப்பாற்றி இருக்கிறது.
டாஸ்மாக்கில்
மது விற்பனை அமோகம். மது பிரியர்கள் அலைமோதினார்கள். ஆனாலும்… மது விற்பனை போன ஆண்டை
விட குறைவுதான். கடந்த ஆண்டு 297 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்த ஆண்டு அதை
விட 14 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதற்கு அரசு வருத்தப் படுகிறதா? அல்லது பத்திரிகைகள்
வருத்தப் படுகிறாதா என்பது தெரியவில்லை.
விற்பனையில்
முதல் இடத்தை மதுரையும், இரண்டாம் இடத்தை சென்னையும் தட்டிச் சென்றிருக்கிறது. இது
நம் நாட்டின் வளர்ச்சி. எல்லோரும் கை தட்டிக் கொள்ளுங்கள்.
இந்த
புத்தாண்டில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளியிருக்கிறது. உலகத்தில் 3 லட்சத்து
95 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கிறது. அதில் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் இந்தியாவில்
பிறந்து, முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவுக்கு இரண்டாவது இடம்தான்.
புத்தாண்டு
என்றாலே கடவுள்களுக்கு மவுசு கூடி விடும். ஆனால்… இந்த புத்தாண்டு அதிலும் பின் தங்கியிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமில்லை. கடந்த ஆண்டும்
இதே நிலைதான்.
வருடா
வருடம் மக்களுக்கு கடவுளின் தேவை குறைந்து கொண்டே வருகிறது. பணத் தேவை அதிகமாகிக் கொண்டே
போனால், பிற தேவைகள் குறைந்து கொண்டுதான் வரும்.
எத்தனை
புத்தாண்டுகள் பிறந்தாலும் நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. வெற்றி தோல்விகள்
நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வோம். புரிந்து வாழ்வோம்.
Comments
Post a Comment