அழியும் குமரி



அழியும் குமரி என்ற தலைப்பை படித்தவுடன் ஏதோ ஒரு அழகிய குமரிப் பெண்ணைப் பற்றி சொல்லப் போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். இது அழகிய கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றியது. இந்த மாவட்டத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

91.75 சதவிகிதத்திற்கு மேல் படித்தவர்களைக் கொண்ட மாவட்டம் இது. எங்கும் இயற்கையின் அழகு. கடற்கரை மட்டும் 72 கிலோ மீட்டர்கள். நிலப்பரப்பு 2,877 சதுர கிலோ மீட்டர்கள். மக்கள் தொகையோ வெறும் 19 லட்சத்திற்குள் தான் இருக்கும்.

ஐந்திணைகளில் நான்கு திணைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைந்தே உள்ளது. இது இயற்கையின் சிறப்புகளில் ஒன்று. குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும். முல்லை – காடும் காடு சார்ந்த இடமும். மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும். நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்.

பெருமை வாய்ந்த கோவில்கள். நீர்நிலைகள், சித்தர்கள் வாழ்ந்த இடங்கள். பல வரலாறுகளும், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்று சின்னங்களும் இங்குள்ளது. இதெல்லாம் சிறப்போ சிறப்பு தான். இதை பாதுகாப்பதில் தான் சிக்கல்கள் நிறைந்துள்ளது. இயற்கையை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் இது அழிக்கப்படுவதால் சிக்கல் இடியாப்ப சிக்கலாக மாறியிருக்கிறது.

47 கல் குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உடைத்து எடுத்துச் செல்கிறார்கள். மலைகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. கூடவே மருத்துவ குணம் வாய்ந்த செடிகளும் இல்லாமல் போகிறது.

கேரளாவின் குப்பைத் தொட்டியாக கன்னியாகுமரி மாவட்டம் மாறி வருகிறது. அங்குள்ள மருத்துவ குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டிச் செல்கிறார்கள். அதனால் இயற்கை மாசுபடுவதோடு கிருமி தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு எல்லையில் உள்ள நமது செக்போஸ்ட் அதிகாரிகள் காரணமாக உள்ளனர்.

விவசாயத்தை அழித்து ரியல் எஸ்டேட் தொழிலை வளர்த்த பெருமை முன்னாள் அமைச்சர் நாஞ்சில் முருகேசனையே சேரும். நாகர்கோவில் நகரத்தைச் சுற்றி உள்ள வயல்வெளிகள் அழிந்து வீடுகளாக மாறி வருகிறது.

இந்த மாவட்டத்திற்கு வேலைக்காக வருகிறவர்கள், இங்கே உள்ள இயற்கையால் கவரப்பட்டு, வீடு கட்டி இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவதாக உள்ளுர்வாசிகளுக்கு கவலை இருக்கிறது. இப்போது அந்த பட்டியலில் வட மாநிலத்து மக்களும் சேர்ந்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் வியாபாரிகளின் பார்வை இந்த மாவட்டத்தில் விழுந்திருக்கிறது. நாகர்கோவிலில் போத்தீஸ் துணிக்கடை தன் கிளையை ஆரம்பித்ததில் மக்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த பெரிய மரத்தை வெட்டி வீழ்த்தியிருக்கிறது. இதற்கு கலெக்டர் உட்பட பல அரசாங்க ஊழியர்களும் துணை போயிருக்கிறார்கள்.

ஜாய் ஆலுக்காஸ், லலிதா ஜீவல்லரி போன்ற பல கார்ப்பரேட்டுகள் உள்ளே நுழைந்தாகிவிட்டது. ரிலையன்ஸ் ஆரம்பிக்கும் மால் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் துவங்கும். இவர்கள் இதோடு விட்டால் பரவாயில்லை. ஆனால்… இவர்கள் விட மாட்டார்கள். முதலில் சென்னை தி நகரில் ஆரம்பித்த இவர்களின் தொழில், பிறகு கிளைகள் என்ற பெயரில் சுற்றுவட்டாரங்களுக்கு பரவி போக்குவரத்திற்கும் மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அதைப் போலத்தான் நாகர்கோவிலை சுற்றியுள்ள விவசாய நிலங்களை அழிப்பார்கள்.

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழிச் சாலையை உருவாக்குகிறார்கள். மக்கள் நெருக்கடியோ, வாகன நெருக்கடியோ இல்லாத மாவட்டத்திற்கு இந்தச் சாலை தேவையற்றது. இதற்கு பின்னாலிருக்கும் அரசியல் இயற்கையை பலி வாங்கி, அமைதியை குலைக்கக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

இந்த அழிவுகளை எதிர்த்து சில குழுக்கள் போராடினாலும், இந்த மாவட்டத்து படித்த மக்கள் அதிகம் ஒன்று சேரவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடியது.

31 தியதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு குமரி மாவட்டத்தின் அழகை ஹெலிகாப்டரிலிருந்து ரசிக்க சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இயற்கையின் அழகை ரசித்துக் கொள்ளுங்கள். இனி இயற்கை இல்லாமல் போகலாம்.

மக்களுக்குத் தேவையில்லாத சாலை வருகிறதென்றால், தேவையில்லாத ஏதோ ஒன்று வரப் போகிறது அல்லது மக்களுக்கு தேவையுள்ள ஏதோ ஒன்று போகப் போகிறது என்று அர்த்தம்.

படித்த மக்கள் நிறைந்த மாவட்டம் என்பது பெருமைதான்., என்றாலும்... இயற்கையை பாதுகாக்காத படிப்பு என்ன படிப்போ?

Comments