மனநோயாளிகளா காவல் துறையினர்?



ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களில் பதிமூன்று பேரை படுகொலை செய்தபிறகே தமிழக அரசு அடிபணிந்திருக்கிறது. ஆனால்தை உண்மை என்று நம்பிவிட முடியாது. ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்திடம் போகும். அது 2013 ல் அளித்த தீர்ப்பை மீண்டும் அளித்தால் மறுபடியும் பல ஆண்டுகள் போராட வேண்டியதுதான். கிராம சபை என்ற ஒன்று இருந்தாலும், அதை யாரும் முன் வைக்கவில்லை.

ஒரு வியாபாரிக்கு நம் நாடும், மாநிலமும் அடிமைப்பட்டுக் கிடப்பது வெட்கக் கேடானது. இந்தியாவை வியாபாரிகள் ஆள்கிறார்கள் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை.

ஒரு வீடியோ காட்சியில் வயது முதிர்ந்த ஒருவரை வயது குறைந்த காவல் துறை அதிகாரி தன் முழங்கையால் முதுகில் குத்துவதைப் பார்க்க மனம் பதறுகிறது. அந்த பெரியவரின் இடத்தில் நம் தந்தையை வைத்துப் பார்க்கும் மனம் சஞ்சலப்படுகிறது. குத்திய அதிகாரிக்கு தந்தை உண்டா? அல்லது தந்தை யார் என்று அறியாதவரா? என்பது தெரியவில்லை.

விளையாட்டு உடையில் வேனின் மேலே நின்றுகொண்டு, நிதானமாக மக்களை குறி பார்த்து சுடுபவனை இனி எப்படி அழைக்க வேண்டும்? கொலைகாரான் என்றா? காவல்காரன் என்றா?
  
தமிழக காவல் துறை எப்போதும் மக்களுக்கு எதிராக ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்காகத்தான் காத்துக்கிடக்கிறதா? இதற்கு முன் நடந்த பல கலவரங்கள் அப்படித்தான் காட்டியிருக்கிறது. மக்களைக் கொன்று அவர்கள் ரத்தத்தைப் பார்த்து சுகம் காணும் மனநோயாளிகளா காவல் துறையினர்?

மனநோயாளிகளை பணியிலமர்த்துவதும் மக்களுக்கு நடுவே நடமாட விடுவதும் தவறானது., ஆபத்தானதும் கூட. வருடத்திற்கு ஒரு முறை காவல் துறையினருக்கு கட்டாய மனநல பரிசோதனை நடத்தவேண்டும். அதுதான் மக்களுக்கு பாதுகாப்பானது. சில நேரங்களில் அவர்களுக்கே கூட பாதுகாப்பானதாக அமையும். இனியாவது அவர்கள் ரத்தம் குடிக்கும் வேட்டை நாயாக வெறி கொண்டு அலைவதின் காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும்.

காவல் துறையினர் தங்களுக்குள் ஒளிந்து வைத்திருக்கும் குரூரமான மிருகத்தை வெளியிலனுப்பிவிட்டு, மனிதர்களோடு பழக மனிதர்களாக மாறவேண்டும். அல்லது மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால்... அவர்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்துதான் சம்பளம் வாங்குகிறார்கள். அது நம்மை காப்பாற்றுவதற்காக.. கொல்வதற்காக அல்ல. போராடுவது ஜனநாயக உரிமை. ஆங்கிலேயர்கள் போராட்டங்களுக்கு அளித்த மதிப்பைக் கூட நமது அரசு அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

நாமும் நம் போராட்ட யுக்திகளை மாற்றியமைத்து, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய எந்த போராட்டத்தையும் அரசு மதிப்பதே இல்லை. நாம் செலுத்தும் வரிகளின் மூலம்தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு மக்கள்தான் முதலாளிகள். அப்படியானால்நாம் சில முடிவுகளை எடுக்க உரிமையுள்ளவர்களா இருக்கிறோம்.

இதுவரை நல்ல கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு இலவசமாக நமக்குத் தரவில்லை. இப்போது வரி கொடுக்கும் நம்மை கொல்லவும் துணிந்துவிட்டது. இனி எப்போதும் போல மாங்கு மாங்கென்று வருமான வரியை கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மக்கு மதிப்பளிக்காத, நமக்கு கஷ்டம் கொடுக்கும் அரசுக்கு நாம் வருமான வரி கட்டுவதில்லை என்ற போராட்டத்தை  துவங்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப போரட்டமும் மாற வேண்டும்.

இனி வரி கொடாமை போராட்டத்தை அரசுக்கு எதிராக முன் வைக்க வேண்டும். மக்களாட்சியில் மக்கள்தான் அரசு, அவர்கள் அல்ல என்பதை புரியவைக்க வேண்டும். நமக்கு மரியாதையையும், மதிப்பையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், கல்வியையும், நல்ல எதிர்காலத்தையும் தந்தால்தான் வரி கட்டுவோம் அல்லது கட்ட மாட்டோம் என்று போராட்டத்தில் இறங்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

இன்னும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. இனி அரசு நம்மை போராட வைக்காமல் இருந்தால் சிறப்பு. நமது அடுத்த போராட்டம் வரி கொடாமை போராட்டமாக இருக்க வேண்டும்.

Comments