அரங்கு நிறைந்த காட்சி



நாகர்கோவில் – கடந்த வெள்ளி - ராஜேஷ் திரையரங்கம் – விஸ்வரூபம் II படத்தின் முதல் காட்சி ரசிகர்களுக்கானது. அதுவே அரங்கு நிறையவில்லை. அடுத்த காட்சி பொதுவானது. அதுவும் நிறையவில்லை. டிக்கெட் விலை என்னவோ சாதாரணந்தான். திரையரங்கிலும் விலை அதிகமாகக் கூட இல்லை. என்றாலும் கூட்டம் இல்லை.

இதுவரை கமல்ஹாசனுக்குப் பின்னால் அலைந்த ரசிகர்கள், ஏன் அரங்கை நிறைக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் தேடுவது கடினம்தான். 1984 களில் விசிலடித்த ரசிகர்களுக்கு வயதாகியிருக்கும். அவர்களுக்கு திரையரங்கை விட வீடு சிறந்ததென்று தோன்றியிருக்கலாம்.

1994 களில் கூச்சலிட்ட ரசிகர்களுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. பாதி பேரைக் காணவில்லை. ஆனால்… சிலர் பேனர்களில் இருந்தார்கள். 2004 க்குப் பிறகு கமலுக்கு ரசிகர்கள் கிடைக்கவில்லையா என்ன? அந்த இளைஞர்களின் கூச்சலையும் கைதட்டல்களையும் காணவில்லை. ஒருவேளை அவர்கள் ஆன்லைனில் - லைனில் நிற்பார்களோ என்னவோ!

முதல்நாள் திரையரங்கை நிரப்பாத ரசிகர்களை நம்பி கமல் கட்சி ஆரம்பித்திருப்பது சிறப்பானதாக இல்லை. ஒருவேளை அவர் பொதுமக்களை நம்பி ஆரம்பித்திருக்கிறார் என்றால் அதன் விளைவு இன்னும் மோசமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் கட்சி ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் அல்லது மக்கள் மனுக்களை கமலிடம் கொடுத்தார்கள். அவரும் வாங்கிக் கொண்டார். கொடுத்தவர்களும் மகிழ்ந்தார்கள்.

இப்போது கமல் ஒன்றும் முதலமைச்சர் அல்ல. குறைந்தபட்சம் அரசு அலுவலக பியூனாகக் கூட இல்லை. அப்படி இருந்திருந்தால் உயர் அதிகாரிகளின் மேஜையில் வைக்க முடியும். வாங்கிய மனுக்களை கமல் என்ன செய்வார்? கொடுத்தவர்கள் எப்படி நிவாரணம் அடைவார்கள்?

ஒன்றும் புரியவில்லை., தலை சுற்றுகிறது. அதனால் இதை விடுவோம் விஸ்வரூபம் இரண்டிற்கு வருவோம். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால், அவருடைய மக்கள் நீதி மையத்தின் பரப்புரை பாடலாக வருகிறது. அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் ‘நான் படம் பார்க்க வந்திருக்கிறேன். அதில் அரசியல் திணிப்பு எதற்கு?’ என்று கோபமாகவே கேட்டார்.

இன்னொருவரோ ‘நான் ரசிகர்தான்., ஆனால் வேறு கட்சி.’ என்றார்.

ஒரு சிலர் ஆதரவாகவும் சொன்னார்கள். அது அவருடைய பக்தர்கள். அவர்களால் கூட முதல் காட்சியை நிரப்ப முடியவில்லை.

அதை விடுவோம். அரசியலில் இதெல்லாம் சகஜம். படத்திற்கு வருவோம். திரைக்கதையை பிளாஷ் பேக்குகளில் நகர்த்தியிருக்கிறார். அது நல்ல யுக்திதான். என்றாலும் விறுவிறுப்பு இல்லாமல் டல் அடிக்கிறது. ஏதோ பெரிதாக நடந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு தோன்றினாலும், அது வெறுமையாகவே முடிகிறது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கண்டுபிடித்துவிடும் அளவிலே உள்ளது. சண்டைக் காட்சிகள் பிரமாதம்.

பின்னணி இசை மிகவும் பலவீனமாக உள்ளது. காட்சியோடு ஒன்ற வைக்கவில்லை. பிராமண பாஷை பேசுபவர்கள் சாகசம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இது உளவுத்துறையை பற்றிய கதை என்பதால் அவர்கள் பிராமணர் அல்லாதவர்களாகக் கூட இருக்கலாம்.

முதல் பாகத்தில் மீதம் இருந்த பரோட்டாக்களை கொத்தி, கொத்துப் பரோட்டாவாக தந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் தரவில்லை. கொஞ்சம் தவறினாலும் புரியாமல் போகும் நிலையும் திரைக்கதையில் உள்ளது. விஸ்வமும் ரூபமும் இரண்டாக ஆனதால் படம் ஒரு முழுமையைத் தரவில்லை. என்றாலும் முயன்றிருக்கிறார்.

சினிமாவை நேசிக்கும் கமல் இப்படி ஒரு கொத்து பரோட்டாவை தந்திருக்க வேண்டாம். சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு இது பாரம்தான்.

கமல் கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் ரசிகர்கள் எங்கு போனார்கள் என்று தேடி கண்டிபிடித்தால் அவருடைய திரை வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும் பயனுள்ளதாக அமையும்.

Comments