உங்கள் கனவில் நீங்கள் யார்?



வரலாறு நெடுக கனவு பற்றிய சம்பவங்கள் நிறைய உண்டு. எல்லா மதங்களிலும் கனவு பற்றிய நிகழ்வு உண்டு. இதிகாசங்களிலும் கனவுகள் சிதறிக் கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு கனவு காண்கிறாள். அதில் அவள் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. அதனால் கோவலனுக்கு தீங்கு ஏற்படுகிறது. அவள் மன்னனிடம் நீதி கேட்டு மன்றாடுகிறாள். கிடைக்காமல் போகவே அவள் சாபம் மன்னனையும் அரசையும் அழிக்கிறது. அவள் கண்ட கனவு, பின்னால் அப்படியே நடக்கிறது.

கனவுகளில் பல வகை உண்டு. என்றாலும்… முக்கியமாக அடிக்கடி வரும் கனவுகள் (Recurring Dreams), எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (Prophetic Dreams), தெளிவுநிலை கனவுகள் (Lucid Dreams), கொடுங் கனவுகள் (Nightmares), இதிகாசக் கனவுகள் (Epic Dreams), நோய் தீர்க்கும் கனவுகள் (Healing Dreams), பொய் விழிப்புக் கனவுகள் (False Awakening Dreams), பகல் கனவுகள் என்று பல வகை உண்டு.

உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ‘நாம் செய்யும் எந்த செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நம் அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனம் கட்டுப்படுத்துகிறது.’ என்கிறார். எனவே ஒரு கனவை புரிந்துகொள்வதின் மூலம் ஒரு மனிதனை புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் கனவுகளுக்கு பலன் சொல்வதற்கென்று திறமையானவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது ஒரு சில புத்தகங்கள் கிடைக்கின்றன. என்றாலும் அது ஒரு மனிதன் சொல்வது போல இருக்காது. புத்தகங்களிடம் சந்தேகம் கேட்க முடியாது. கனவுகளுக்கு பலன் சொல்வதெற்கென்று ஒரு கடை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருக்குமா என்றும் தெரியவில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

நான் அதிகமாக கனவு காண்பதில்லை. அப்படியே கண்டாலும் மறந்து போய்விடுகிறது. கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் நான் கண்ட கனவு மட்டும் இன்றும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம் அந்தக் கனவு எனக்கு எதையோ சொல்ல வருகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்ததுதான்.

அந்தக் கனவில், நான் அதிகாலையில் இல்லை இல்லை அது எந்தப் பொழுது என்று என்னால் சரிவர சொல்ல முடியவில்லை. ஆனால் அது பகல்தான். நான் ஆற்றங்கரையில் நடந்துகொண்டிருக்கிறேன். யாரோ என்னை பின்தொடர்வதாக உணர்கிறேன். நின்று - பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். மனம் உறைந்து போகிறது. ஒரு சிங்கம் நின்றுகொண்டிருக்கிறது. அதன் கண்களில் என்னைக் கொல்லும் வெறி தெரிகிறது. நான் வேகமாக ஓட ஆரம்பிக்கிறேன்., அது துரத்துகிறது.

நான் ஆற்றைக் கடந்து தப்பிக்க நினைக்கிறேன். ஆறு பள்ளத்தாக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. செங்குத்தான பள்ளத்தாக்கில் சிங்கத்தால் பின்தொடர முடியாது என்ற எண்ணத்தில் இறங்குகிறேன். திரும்பிப் பார்க்கக் கூட அவகாசமில்லாமல் ஓடுகிறேன். அந்த ஓட்டம் கடினமானது போன்றும் கடினமில்லாதது போன்றும் தோன்றுகிறது. வேகமாக ஆற்றில் இறங்கி நீந்துகிறேன். மறு கரையில் ஏறி திரும்பிப் பார்க்கிறேன். சிங்கமும் வெறியோடு நீந்தி வந்துகொண்டிருக்கிறது.

நான் மீண்டும் ஓடுகிறேன். பள்ளத்தாக்கிலிருந்து மேல் நோக்கி ஓடினால் சிங்கத்தால் ஏற முடியாது என்று தப்புக் கணக்கு போடுகிறேன். வேகமாக சாலைக்கு வருகிறேன். ஒருவன் பைக்கில் வர, பின் இருக்கையில் பாய்ந்து உட்காருகிறேன். திரும்பிப் பார்க்கிறேன். சிங்கம் விடுவதாக இல்லை. பின்னால் வந்துகொண்டிருக்கிறது. எனக்கு உடல் சில்லிடுகிறது. பைக் ஓட்டுபவனின் இதயத்துடிப்பு எனக்குக் கேட்கிறது.

நான் செல்ஃபோனில் நண்பருக்குத் தகவல் கொடுக்கிறேன். ஒரு வழியாக எங்கள் பைக் ஊருக்குள் நுழைகிறது. விளையாட்டுக்கு சொல்கிறான் என்று பேசிக்கொண்டிருந்த ஊர் மக்கள் தெறித்து ஓடுகிறார்கள். நண்பர் துப்பாக்கி குழலில் மருந்தை போட்டு இடித்துக் கொண்டிருக்கிறார். பைக் அவர் அருகே செல்கிறது. நான் துப்பாக்கியை வாங்குகிறேன்.

சிங்கம் என் மீது பாய்ந்த வினாடி – துப்பாக்கி வெடிக்கிறது. பைக் தடுமாறி கீழே விழுகிறது. நான் காற்றில் பறந்து தரையில் நிற்க, என் முன்னால் சிங்கம் விழுந்து கிடக்கிறது. ஊர் கூடி வேடிக்கை பார்க்கிறது. என் கனவு இவ்வளவுதான்.

இந்தக் கனவின் பொருள் அப்போது எனக்குப் புரியாவிட்டாலும் இப்போது புரிகிறது. திருநெல்வேலியில் கல்லூரி நடத்தும் ஒரு பெண் எனக்குத் தரவேண்டிய பணத்தை ஏமாற்றிவிட்டு, இனி யாரை ஏமாற்றலாம் என்று ஹாயாக உட்கார்ந்திருக்கிறார். நான் அலைந்து கொண்டிருக்கிறேன். கனவின் பொருள் உடனே புரிந்திருந்தால் எப்படியாவது வாங்கியிருக்கலாம். இனி…

எல்லோருக்கும் கனவு வரும். அந்தக் கனவுகளில் நீங்கள் யார்? என்ன நடக்கிறது? அதன் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். விடை கிடைக்கும்.

Comments