நீதி பாதி மீதி



சமீபத்தில் பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நியமனம் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தலைமை நீதிபதிக்கு எதிராக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உயர்நீதி மன்ற நீதிபதி என்.கிருபாகரன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

விமர்சித்த முன்னாள் எம்எல்ஏ தங்க. தமிழ்செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரனை முகநூலில் விமர்சித்த வேலூர் பெண் மகாலட்சுமி கைது செய்யப்பட்டிருக்கிறார். அடுத்து திருநெல்வேலியில் அரசு ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி தொடர் கைதுகள்.

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதியை விமர்சிக்க உரிமை கிடையாது என்று நீதிபதி கிருபாகரன் காரணத்தை தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஆனால்நீதிபதியும் அவர் எழுதிய தீர்ப்பும் வேறு வேறானதா? அதை எப்படி பிரித்துப் பார்ப்பது?

எழுத்தாளரின் பெயரிடப்படாத புத்தகத்தை எப்படி படிப்பது? சிறந்த தீர்பை வழங்கும் போது, அந்த நீதிபதியை மக்கள் பாராட்டுகிறார்கள். தை ரசிக்கும் அவர்களால் எதிர்ப்பை ரசிக்க முடியவில்லை.

நீதிபதிகள் கடவுளாக இருப்பதை யாரும் எதிர்க்கவில்லை. அவர்கள் கடவுளாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால்கடவுளிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. அது போல இவர்களிடமும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்பதில்தான் முரண்பாடு துவங்குகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குன்காவும், குமாரசாமியும் வேறு வேறு. அவர்கள் தீர்ப்புகளும் வேறு வேறு. இந்த தீர்ப்புகளை சமூக வலைவாசிகள் விமர்சித்து தள்ளினார்கள். அப்போது நீதிபதி குமாரசாமியையும் அவர் தீர்ப்பையும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதற்கும் விமர்சனங்கள் வந்தது.

அதற்கு பதிலாக தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம், ஜனநாயகத்தில் நீதிமன்ற தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டது.

தீர்ப்பை விமர்சிக்கலாம். தீர்ப்பு எழுதியவரை விமர்சிக்கக் கூடாதா? ஜனநாயக நாட்டில் நீதிபதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? நீதிக்கு முன் எல்லோரும் சமம் என்றால் நீதிபதி மட்டும் எப்படி விதிவிலக்கானவர்? உண்மை நிலை என்னவென்றால் நம் நாட்டில் விதிவிலக்காகத்தான் நடத்தப்படுகிறார். அதற்குத்தான் இவ்வளவு கைதுகள்.

நீதியும், உண்மையும், நேர்மையும், கடமையும் கொண்ட நீதிபதிகளை இந்த சமூகம் இழந்துவிட்டதாகவே கருத முடிகிறது. அப்படி உள்ளவர்கள் எங்கேனும் ஒரு சிலர் உண்டு. அவர்களை யாரும் விமர்சிப்பதில்லை. அவர்கள் விமர்சனத்திற்குள்ளும் வருவதில்லை. அவர்களைப் போலவே அவர்கள் தீர்ப்பும் நீதியோடு இருக்கும். அவர்கள் பாராட்டுக்களை மட்டுமே பெறுகிறார்கள்.

விமர்சிப்பவர்களை கைதுகளால் பயமுறுத்த முயலுகிறார்கள். இங்குதான் மக்கள் பயப்படாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதுவே நம் வெற்றியும், அவர்கள் தோல்வியும்.

இந்தத் தொடர் கைதுகள் முறையற்றது. அதைப் பற்றியெல்லாம் நீதிபதி அதாவது நீதிமன்றம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. சில வழக்கில் கேட்டாலும் காவல்துறை அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால்… ஒரு நீதிபதியை விமர்சித்ததற்கு இவ்வளவு கோபம், ஆற்றாமை.

குற்றமும் அதைச் செய்தவனும் எப்படி வேறு வேறாக இருக்க முடியாதோ, அப்படித்தான் தீர்ப்பும் தீர்ப்பை எழுதியவரும் வேறு வேறாக இருக்க முடியாது. அதனால் வழக்கின் முகாந்திரம் மற்றும் சாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ஜனநாயக நாட்டில் விமர்சனம் கூடாது என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.

நீதிமன்றம் என்பது உயிரற்ற மண், கற்களால் கட்டப்பட்ட வெறும் கட்டிடம். அங்கே நீதி என்ற ஒன்று இருந்தால்தான் அதை நீதிமன்றம் என்றழைக்க முடியும். அதற்கு அங்கே ஒரு நீதிமான் இருக்க வேண்டும். இருக்கிறாரா?

Comments