தமிழர்களின் காலன்



தமிழ் மக்களின் கருத்திற்கு எதிர் கருத்துடைய ஒருவர் தலைவர் ஆவது ஆபத்து., முதலமைச்சர் ஆவது பேராபத்து. தமிழர்களின் கருத்திற்கு முற்றிலும் எதிர் கருத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஒரு கட்சிக்கு தலைவர் ஆகிவிட்டார். அது தமிழர்களுக்கு வரப்போகும் ஆபத்தைக் குறிக்கிறது.

பேராபத்து நடப்பதற்கு முன், ஆபத்தை இதோடு தடுத்து நிறுத்தியாக வேண்டும். எப்போதும் தெளிவற்ற கருத்துக்களையே பேசிவந்த ரஜினிகாந்த், இப்போதுதான் தெளிவாக பேசியிருக்கிறார். அதுவும் மக்களுக்கு எதிரான கருத்தை.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடம், எதிற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தொழில் வளர்ச்சியடையாது. தமிழ்நாடு சுடுகாடாக மாறும் என்று சொன்னார். அதில் உயிர் வாழ்வதற்காக போராடும் மக்களைப் பற்றி கவலைப் படாமல், தொளிற்சாலை முதலாளிகளைப் பற்றி கவலைப்படும் கருத்து இருந்தது.

இப்போதாவது தமிழ் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் என்று அவரே கருத்தின் வழியாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இனியாவது நாம் அவரை ஒதுக்கித்தானாக வேண்டும். ரஜினி பிஜேபியின் கூலியாக இருந்து நம்மை பலியிடப் போகிறார் என்பதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்… அவர் திரைப்படத்தில் சொன்ன வசனம்தான் நமக்கு. ‘கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது.’

கருத்தியல் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் உண்டு. தன்னைப் பார்த்துதான் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால் அவர்கள் முன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பது ஒரு தனி மனிதனுடைய கருத்து. பணத்தை சேமித்தால்தான் ஒரு நிலம் வாங்க முடியும் என்பது ஒரு வீட்டின் கருத்து. சாராயம் விற்றால்தான் நாட்டை வளப்படுத்த முடியும் என்பது நாட்டின் கருத்து.

கருத்து என்பது எப்போதும் நம்மோடும், நம்மை சுற்றியும் இருக்கிறது. இதில் சந்தர்ப்பவாத கருத்துக்கள் ஆரம்பத்தில் எல்லோரையும் தடுமாற வைக்கும். பிறகு பொய் கருத்து அல்லது இரட்டை வேட கருத்து என்று புரிந்துகொள்ளப்படும். அதில் ஒன்றுதான் ‘காவல் துறை உங்கள் நண்பன்.’ என்ற கருத்து. இதை அரசு சொல்கிறது., மக்கள் நம்புவதில்லை.

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்ற வாசகம் மது பாட்டில்களில் இருக்கிறது. அப்படியென்றால் அதை ஏன் விற்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அரசிடமிருந்து சரியான பதில் இல்லை. நாடு அதில் கிடைக்கும் பணத்தால்தான் இயங்குகிறதென்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒரு நாட்டிற்கே கேடு விளைவிக்கக் கூடிய மதுவை, அந்த நாடே விற்பதை எப்படி எடுத்துக் கொள்வது? இது போலி கருத்துடைய தேசம். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. அவர்களில் ஒருவராக, எந்த மாற்றமும் இல்லாத தலைவராக ரஜினிகாந்த் வருகிறார். ஏற்கனவே இருந்த, இருக்கிற தலைவர்களைப் போல வாழ்ந்துகாட்ட வருகிறார்.

அவருக்கு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் பணம் சம்பாதிப்பதே நோக்கம். அதற்காக அவர் தமிழ் மக்களை பலி கொடுப்பதை ஏற்க முடியாது. தமிழ் மக்களில் பலர் அவருடைய ரசிகர்களாக இருக்கலாம். அதற்காக எதிர் கருத்துக்கொண்ட அவரை தலைவராக ஏற்க முடியாது. ரசிகர்கள் முதலில் தமிழ் மக்களாக இருக்க வேண்டும். பிறகுதான் ரசிகர்கள். தன் சுய லாபத்திற்காக தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்திய ரஜினிகாந்திற்கு, போராட்டம் என்பது ஜனநாயக உரிமை என்பதை எப்படி புரிய வைப்பது?

இன்று காலா திரைப்படம் வெளியிடப்படுகிறது. அது வெற்றி பெறாமல் போனால், அவர் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வார். திரைப்படம் ஓடாமல் போக வேண்டுமானால் மக்கள் தியேட்டர் பக்கம் அடியெடுத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

நாம் செய்வோமா? எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால்… தமிழ் ரசிகர்கள், தமிழ் மக்களாக இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் அவருடைய காலா படம் திரையிடப்பட வேண்டும் என்பதற்காக, திரைப்பட வர்த்தக சபை முன் கன்னடத்தில் பேசி, நான் உங்களில் ஒருவன் என்பதை நிரூபித்திருக்கிறார். இதை தமிழ் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்., முட்டாள்கள் என்று ரஜினிகாந்த் நினைத்துக் கொண்டிருப்பதை தமிழ் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தெருவில் கிடந்த அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, வெற்றி பெற வைத்து, கோடீஸ்வரனாக்கி, தமிழ்நாட்டையே அவருக்குக் கொடுத்த ரசிகர்களுக்கு அவர் வைத்திருப்பது துப்பாக்கித் தோட்டாக்கள். அவரை முதலமைச்சராக்கியப் பிறகு, அந்த தோட்டாக்களை அவர் ரசிகர்களுக்கு பரிசாகத் தருவார்.

தூத்துக்குடி சம்பவத்திற்குப் பிறகாவது ரஜினி ரசிகர்கள் தமிழர்களாக மாறுவார்களா? காலா திரைப்படத்தின் வெற்றி தோல்வியில் அது தெரியும்.

Comments