வலைவாசிகளுக்கு ஆபத்து


இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு பெரும் தலைவலியாக இருப்பது சமூக வலைத்தளங்கள். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதில் உடனடியாக பதில் கிடைக்கிறது. அதுவும் கிண்டலாக.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வலைவாசிகள் கிண்டல் அடிக்காகமல் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும், தேடல்களுக்கும் ஒருவரும் பதில் சொல்ல முடியவில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இந்த மூன்று மாவட்டங்களில் இணையதள சேவையை நிறுத்தியதற்கு ஜனநாயக நியாங்கள் ஒன்றும் இல்லை. என்றாலும்… வலைவாசிகளைக் கண்டு அரசு அஞ்சுகிறது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

உண்மைகளை சமூகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய பத்திரிகைகள், அதை மறைக்கும் போது சமூக வலைதளங்களே அந்த கடமையை செய்து முடிக்கின்றன. அதில் பல பொய்யாகவும் ஒருதலைபட்சமாகவும் இருக்கின்றன. என்றாலும்… பல உண்மையானவைகளாகவும் நடுநிலையாகவும் உள்ளன. இப்போதைய சூழ்நிலையில் பத்திரிகைகள் தங்கள் கடமை என்ன என்பதை மறந்து வேறு பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அதனால் சமூக வலைதளங்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.

பல செய்திகளை பத்திரிகைகள் தருவதற்கு முன்பே, சமூக வலைதளங்கள் தந்துவிடுகின்றன. மட்டுமல்லாமல் அவை பத்திரிகைகளின் உண்மையான முகத்தையும் அம்பலப்படுத்துகிறது – அசிங்கப்படுத்துகிறது. அது பத்திரிகைகளுக்கு பின்னடைவுதான். பத்திரிகைகளை அடக்கும் அரசுகள், மக்களின் சமூக வலைத்தளங்களை ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகின்றன. அந்த திணறல்களை முடிவுக்குக் கொண்டுவர, மோடியின் பி.ஜே.பி அரசு சமூக வலைத்தளங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது.

அந்த முடிவு சொல்லும் செய்தி என்னவென்றால்… நீங்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தால்… நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் அதாவது பழிவாங்கப்படுவீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

எதிர் கருத்து என்பது, அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை மக்களே ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும் அல்லது அமைதியாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னால் நீங்கள் அரசுக்கு எதிரானவர். கண்காணிக்கப்படுவீர்கள். (தண்டிக்கப்படுவீர்கள்.)

மக்களாகிய நாம் ரவுடிகளிடமிருந்தும், தெருப் பொறுக்கிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், கொலைகாரர்களிடமிருந்தும் கொள்ளைக் காரர்களிடமிருந்தும், பயந்து வாழ்ந்த காலம் போய் இப்போது நம் அரசைப் பார்த்தே பயப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதற்கு முன், சமூக வலைத்தளங்களில் எழுதிய வலைவாசிகளை இந்த அரசுகள் தண்டிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறது. இப்போது மீண்டும் அந்த வேலையை துவங்கியிருக்கிறது.

ஃபேஸ்புக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன் குறித்து அவதூறு பேசியதாக சூர்யா ஆரோ என்ற பெண் மீது, பாஜக மாநில செயலாளர் அனு சந்திரமவுலி உள்ளிட்ட நிர்வாகிகளால் மே 29 ஆம் தேதி டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் ஒன்று அளிக்கப்படுகிறது.

ஜுன் 2 ஆம் தேதி சூர்யதேவி என்ற திருச்சி பெண்ணை சென்னையில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கிறது காவல்துறை. இந்த கைது நான்கு நாட்களில் நடந்து முடிந்திருக்கிறது. அதே நேரம் பெண் பத்திரிகையாளரை அவதூறு பேசிய நடிகரும், பிஜேபி பிரமுகருமான எஸ்.வி.சேகர் இரண்டு மாதங்களாகியும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தை எல்லாருமே புரிந்துகொள்ள முடியும். அடக்குமுறை மக்களுக்கு மட்டும்தான். இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் வேறு வேறு நீதிகள்.

இன்றைய அரசையோ, அரசு சார்ந்தவர்களையோ பற்றி எதிராக பேசினால் எழுதினால் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்பதை வலைவாசிகளின் மனதில் ஆணியடித்து உட்கார வைத்து, கிலி ஏற்படுத்தவே சூர்யதேவியின் அவசர கைது.

பல அரசியல் கட்சித் தலைவர்கள், ஒருவர் மீது ஒருவர் அவதூறு பேசியிருக்கிறார்கள். வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா போன்றவர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியவர்கள். அதுவும் மேடையில். மேலும் பல காலகட்டங்களில் பலர் அவதூறு புகார் அளித்திருக்கிறார்கள். அந்த புகார்களின் அடிப்படையில் இன்று வரை எந்த கைதும் நடக்கவில்லை. எஸ்.வீ. சேகரை இந்த நீதியின் பிதாக்களாகிய காவல்துறையினர் இன்னும் கைது செய்யவில்லை. ஆனால்… இந்த பெண்ணிற்கு மட்டும் ஏன்?

பத்திரிகைகளை விலைக்கு வாங்கிய அல்லது மிரட்டி பணிய வைத்த அரசால், சமூக வலைதளங்களில் எழுதும் மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால்… அவர்கள் நிறுவனம் அல்ல.

இந்த சூர்யதேவியின் கைது மூலமாக பிற வலைவாசிகளை அரசு மிரட்டுகிறது. எங்களைப் பற்றிய உண்மையை எழுதினாலோ பேசினாலோ இந்த பெண்ணைப் போல் நீங்களும் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்படுவீர்கள் என்று.

இனி… வலைவாசிகள் எழுதுவார்களா? பேசுவார்களா?

பார்ப்போம்.

Comments