இது
விமர்சனம் அல்ல. ஒரு திரைப்படத்தின் பெயரை பற்றி பேசப் போகிறோம்., அவ்வளவுதான். ஏன்டா தலைல எண்ண வெக்கல?,
என் ஆளோட செருப்பைக் காணோம், அஸ்கு புஸ்க்கு என்ற பெயர்கள் அதிகமாக வந்துகொண்டிந்த
நேரத்தில் இரும்புத்திரை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.
வாய்க்கு
வந்ததெல்லாம் பெயர்கள் ஆனது தமிழ் சினிமாத் துறையில் பயிலாத குறும்பட இயக்குநர்கள்
வந்த பிறகுதான். இப்போதும் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும் வரும். வித்தியாசம் என்ற
பெயரில் இம்சையை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில்
ஒரு பெயர் மக்கள் மனதில் பதிய வேண்டும். அடுத்து அவர்களை திரையரங்கத்திற்கு இழுத்துவர
வேண்டும். அதனால் ஒரு கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதைவிட இரண்டு
மடங்கு முக்கியத்துவம் பெயருக்கு கொடுக்கப்பட்ட காலம் இருந்தது. அதற்கு தமிழ் திரையுலகை
ஆட்டிப்படைத்த எம்ஜிஆர் அவர்களே சான்று. அவர் தன் திரைப்படத்தின் பெயருக்கு அதிக கவனமும்,
அக்கறையும் எடுத்துக்கொள்வார் என்பது வரலாறு.
பிக்பாக்கெட்
அடிக்கும் ஒரு திருடனைப் பற்றிய கதைக்கு பெயர் வைக்க ஆலோசனை நடந்தது. மக்களுக்கு நல்ல
கருத்து போய் சேர வேண்டும். அதனால் படத்தின் பெயர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில்
எம்ஜிஆர் உறுதியாக இருந்தார்.
நல்லதுக்கு
காலமில்லை, திருடாதே என்ற இரண்டு பெயர்கள் முன் வைக்கப்பட்டது. நல்லதுக்கு காலமில்லை
என்ற பெயர்தான் கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. ஆனால்… எம்ஜிஆர் திருடாதே பெயரைத்தான்
தேர்வு செய்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், நல்லதுக்கு காலமில்லை என்று எம்ஜிஆரே சொல்லிவிட்டார்
அதனால் நாம் நல்லது செய்யவேண்டாம் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள். அது நல்லதல்ல
என்பதுதான்.
நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு திருடன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. அவர்
படத்தை மக்கள் கதையாக மட்டுமே பார்ப்பார்களே தவிர, கருத்தாக பார்க்க மாட்டார்கள் என்பது
அவருக்கு பலமாக இருந்தது.
அப்போது
பெயருக்கு பல காரணங்கள் முன் வைக்கப்பட்டது. பெயர் ஏற்படுத்தப் போகும் விளைவுகளும்
ஆலோசிக்கப்பட்டது. நல்ல விளைவுகளே முன்னிருத்தப்பட்டது. இப்போது பணம் சம்பாதிக்கும்
விளைவுகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
முதலில்
ஒரு வார்த்தை பெயருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடுத்து இரண்டு வார்த்தைகள்,
கடைசியாக மூன்று வார்த்தைகள். அதற்கு மேல் வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். விதிவிலக்காக
ஒரு சில திரைப்படங்கள் வந்ததுண்டு. ஆனால் அது தமிழ் திரையுலகில் தொடரவில்லை.
உதாரணத்திற்கு
1981 ல் வந்த சின்ன முள் பெரிய முள்., ராஜ்பரத் இயக்கியது. இது பெயர் போல் இல்லாமல்
எதுகை மோனையோடு பாடல் போல் இருக்கும். என்றாலும் ஒரு கடிகாரத்தை நினைவுபடுத்தும். கடிகாரம்
நேரத்தை சொல்கிறது. நேரம் ஒரு சம்பவத்தைக் குறிக்கிறது. நேரத்தோடு தொடர்புடைய சம்பவம்தான்
கதை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பெயர் என்பது கதைக் களத்தை சொல்லிவிடும்.
இப்போது
வந்திருக்கும் திரைப்பட விளம்பரத்தின் பெயர், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
இது எதை நினைவுபடுத்துகிறது? நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு சிவாஜியும் பத்மினியும்
நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ஞாபகத்திற்கு வரும். இன்றைய இளைஞர்களுக்கு
அது தெரியாவிட்டாலும் மறைந்திருந்து பார்ப்பது ஆணா? பெண்ணா? எதற்காக பார்க்கிறார்கள்?
அதில் என்ன பெரிய மர்மம் இருந்துவிட முடியும்? இப்படி எல்லா கேள்விகளுக்கும் தெளிவற்ற
தன்மையே கிடைக்கும். ஒட்டுமொத்தமாக விளம்பரத்திலுள்ள கதாபாத்திரங்களை வைத்து அது ஒரு
திகில் படம் என்று மட்டும் புரிந்துகொள்ளப்படும்., அவ்வளவுதான்.
பாடல்
பெயர் ஆகாது. பெயர் வசனம் ஆகாது. வசனம் இசை ஆகாது. இதெல்லாம் வேறு வேறு என்று எப்போது
புரிந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை.
அப்போதைய
பெயரில் புதுமையும், ஈர்ப்பும், வியாபார யுத்தியும், விளம்பர யுக்தியும் ஒளிந்திருக்கும்.
எந்த வகையைச் சார்ந்த திரைப்படம் என்பதை அந்தப் பெயர் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ
சொல்லிவிடும். இப்போதும் மக்களை ஈர்க்க என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால்… பெரும்பாலான
படங்கள் மக்களைப் போய் சேர்வதில்லை. அதற்கு திரைப்படத்தின் பெயரும் ஒரு காரணமாக அமைகிறது.
ஒரு
வார்த்தையில் பெயர் இருந்தால் மக்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும். கவனிக்கும்படியாகவும்
இருக்கும். காளி, வேலைக்காரன், தொழிலாளி, மன்னன், பணக்காரன், ஜானி, இப்போது இரும்புத்திரை.
இது 1970 ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் பெயர்தான். என்றாலும்
மீண்டும் ஒரு கம்பீரத்தை தந்திருக்கிறது.
உட்கார்ற
இடத்துல கட்டி என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்தால், இன்னொருவர் கொஞ்சம் தள்ளி உட்கார்
என்று பெயர் வைப்பார் போலிருக்கிறது. இந்த மாதிரி பெயர்களை வைத்தால் மக்கள் எப்படி
சினிமாவுக்கு மதிப்பளிப்பார்கள்? முக்கியத்துவம் தருவார்கள்? படம் பார்க்க வருவார்கள்?
புதுமை
என்பதற்காக வீடு புகுந்தா அடிப்பீர்கள்? போங்கப்பா நீங்களும் உங்கப் பெயரும். இது நான்
அலுத்துப் போய் சொன்னது. இதையே ஒரு படத்திற்கு பெயராக வைத்துவிடாதீர்கள்.
Comments
Post a Comment