இனி நமக்கு மாட்டு வண்டிதான்



பெட்ரோல், டீசலுக்கான வரி குறைப்பு சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக கூறியுள்ளார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை., இந்திய குடிமக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதுதான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

மக்களுக்கு மேலும் மேலும் சுமையைக் கொடுத்துவிட்டு, வரியை கட்டுங்கள் என்று கேட்பது எப்படி முறையாகும்? இங்கே இரண்டு தரப்பும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். மக்கள் மட்டும் நேர்மையாக இருந்துவிட்டால் அவர்களுக்கு பலன் கிடைத்துவிடுமா என்ன? அரசும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

இப்போதைய பிரதமர் மோடி பதவியேற்று நான்காண்டுகள் ஆகின்றன. அவர் சொன்னதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க பண மாற்றம் கொண்டு வரப்பட்டது. மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் களிலும் கால் கடுக்க நின்றார்கள். பலர் காத்திருந்து இறந்துகூட போனார்கள். ஆனால்… இதுவரை விலைவாசி மட்டுமே உயர்ந்திருக்கிறது – உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஏழைகளின் வாழ்வு மட்டும் உயர்ந்துவிடவில்லை.

ஜிஎஸ்டி கொண்டுவந்தால் எல்லா விலையும் குறையும் என்று சொல்லப்பட்டது. மக்கள் அதையும் நம்பி வாய்பிளந்து நின்று கொண்டிருந்தார்கள். அதை அமல்படித்திய பின், எல்லாம் மூன்று மடங்கு விலை உயர்வை சந்தித்தது.

இப்போது மக்களின் எல்லா நம்பிக்கையையும் சிதைந்து போயிருக்கிறது. வாழ்தல் சாத்தியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஆனால்மீண்டும் மீண்டும் களைப்படையாமல் பொய் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது கோயபல்லை ஞாபகப்படுத்துகிறது.

சமீபத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கு மருத்துவ வசதி என்ற ஒரு அறிவிப்பும் வந்தது. அப்படியென்றால் இலவச மருத்துவமும் ஏழைகளுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் நெருங்குகிறதா?

நீங்கள் விதிக்கும் எல்லா வரிகளையும் கட்டித்தான் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நல்ல கல்வியும், மருத்துவமும் இலவசமாகக் கொடுத்தால் என்ன? இந்த கேள்வியை சத்தமாக முன் வைத்தால்ஏற்கனவே இதெல்லாம் இருக்கிறது. கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம் என்ற பதில் வரும்.

அவைகள் ஏழை மக்களுக்கு பயன்படும் தரத்தில் இல்லையே. அதற்கு என்ன செய்வது? யார் செய்வது? எப்படி செய்வது? திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?

எல்லா திட்டங்களும் பெரிய பெரிய சாலைகள் அமைப்பதில் போய் முடிகிறது. அது பெரும் முதலாளிகள் இந்திய வளங்களை கொண்டு செல்வதற்காக. அதற்கு அவ்வளவு முனைப்புக் காட்டப்படுகிறது. ஆனால்மக்களின் குரலுக்கு மதிப்பே இல்லை. மக்கள் ஓட்டுகளை வாங்கித்தான் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்து போய்விட்டார்கள். இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது.

வெளிநாடுகளில் பெட்ரோல் விலை மிகக் குறைவு என்று பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதை மக்கள் ஏக்கத்தோடு பார்க்கிறார்கள். ஆட்சியாளர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். அவர்கள் குறைந்தபட்ச நிம்மதியை அடைய முடியும். ஆனால்  அந்த நிம்மதியைத் தர மறுக்கிறார்கள்.

வளர்ச்சி என்பது பேச்சில் இருந்தால் மட்டும் போதாது. செயலில் வேண்டும். அந்த செயல் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் செயல் அத்தனையும் மக்களிடம் அவநம்பிக்கையைதான் ஏற்படுத்தியிருக்கிறது.

தொடந்து பொய் சொல்லிக்கொண்டே இருந்தால், அது உண்மையாக மாறிவிடும் என்ற சித்தாந்தம் மிக பழயது. இல்லாத உணவை இருக்கிறது என்றால், அதை சாப்பிட முடியாது. அந்த உண்மையை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். உண்மை ஊமையாக இருக்கலாம்., ஆனால் பொய்யைவிட பலமானது – சக்திவாய்ந்தது. அதை வரலாறு பார்த்திருக்கிறது.

பஸ் கட்டணத்தை ஏற்றினீர்கள்., வாகனங்கள் வாங்கினோம். பெட்ரோல் விலையை ஏற்றினீர்கள். மாட்டு வண்டி வாங்கலாம்தான்மாட்டுக்கு போடும் புல்லுக் கட்டிற்கு பெட்ரோலை விட அதிக விலை விதித்தால் என்ன செய்வது என்ற பயத்தில் உள்ளோம்.

ஏழைகளுக்கு ஏதாவது செய்யுங்கள். வாழ்ந்துவிட்டு போகட்டும்.

Comments