உனக்கு நீதி எனக்கு பீதி



விசாரணை கமிஷன். இது அரசாங்கத்தால் அரசாங்கத்தை விசாரணை செய்யும் தற்காலிக அமைப்பு. இதற்கு முன் நடத்தப்பட்ட எந்த விசாரணை கமிஷன்களும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்ததில்லை. விசாரணை முடிந்தவுடன் அமைப்பும் மூடப்படும். அடுத்து வேறு சட்ட மீறல் – வேறு பெயர் – வேறு விசாரணை. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை. இழப்பு - வலி - நேர விரயம் மட்டுமே.

உதாரணத்திற்கு 1999 ல் மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – பதினேழு பேர் கொலை. 2011 ல் பரமகுடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அன்று துப்பாக்கிச் சூடு – ஆறு பேர் கொலை. இவைகளுக்கும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

விசாரணை கமிஷன் என்பது கொலை வெறியில் இருக்கும் மக்களிடமிருந்து தங்களையும், தங்கள் அரசையும் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி. அது மக்களின் வெறியை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சியாகவே இதுவரை இருந்திருக்கிறது.

இப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – கொல்லப்பட்டது பதிமூன்று பேர் - ஒரு நபர் விசாரணை கமிஷன் - விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் – அறிவித்திருப்பது தமிழக அரசு.

அரசால் அரசை விசாரிக்க ஒரு கமிஷன். இது எப்படி நேர்மையான விசாரணையாக இருக்க முடியும்? இதற்கு ஒரு மாற்றை உருவாக்கித்தானாக வேண்டும். சமூக ஆர்வலர்களின் கருத்தும் இதுதான். அரசே அரசுக்கு சாட்சி சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் திருடாமல் இருப்பான் என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது எல்லாம் மாறியிருக்கிறது. எல்லாவற்றையும் திருடிவிட்டு, திருடன் கையில் சாவியைக் கொடுக்கும் அளவுக்கு புத்தியில்லாதவனாக இருக்கிறாயே என்றும் கேட்டுவிட்டுப் போவான்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விசாரணை கமிஷன் எப்போதும் போல ஒரு பழைய அறிக்கையை தரும் அல்லது தரலாம். அந்த விசாரணை நடக்கட்டும். மக்களும் ஒரு விசாரணையை மனதுக்குள் நடத்திப் பார்ப்பதில் ஒன்றும் தப்பில்லை. சிந்திப்பதுதானே மனித அறிவு. அப்படி அந்த விசாரணையை வேறொரு கோணத்தில் நடத்திப் பார்ப்போம்.

1. காவல்துறையில் பல உட்பிரிவுகள் உண்டு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ஸ்னைப்பர்கள் என்பதால் அவர்கள் காவல் துறையின் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள்?

2. இந்தப் பிரிவு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?

3. மக்கள் போராட்டத்திற்கு எதிராக இந்தப் பிரிவை பயன்படுத்தலாமா?

4. இந்தப் பிரிவின் தலைமையகம் எங்கே உள்ளது?

5. தூத்துக்குடியில் தலைமையகம் இருந்தால், அது எந்த காரணத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டது?

6. அல்லது கிளை அலுவலகம்தான் உள்ளதா?

7. இல்லையென்றால் இதன் கிளை அலுவலகம் எங்கு உள்ளது?

8. அவர்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலிருந்து எப்போது ஆணை பிறப்பிக்கப்பட்டது?

9. அங்கிருந்து ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால்… வேறு எங்கிருந்து – யார் ஆணை பிறப்பித்தது?

10. அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து சேர எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது?

11. அவர்களுக்கு தலைமை அலுவலகம் அல்லது கிளை தூத்துக்குடியில் இருந்திருந்தாலும் ஆணையை பெற்று வந்து சேர்வதற்கு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். அந்த நேரம் சரியாக பொருந்துகிறதா?

12. அவர்கள் ஏற்கனவே சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருந்தார்கள் என்றால்… அவர்களை காவலர்களாக கருத முடியாது. நியமிக்கப்பட்ட கொலைகாரர்களாகவே ஏற்றுக்கொள்ள முடியும்.

இவ்வளவு கேள்விகள் போதுமானது. அவர்கள் அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்துவிட்டு, ஜெயிலுக்கு அனுப்ப வேண்டியதுதான். ஆணையிட்டவர்களையும் சேர்த்து.

இங்கே நடக்கப் போவது என்ன? விசாரணை கமிஷன், மக்களின் கோபம் தணிந்த ஏதோ ஒரு நாளில் அறிக்கையை சமர்ப்பிக்கும். அதில் காவல்துறையின் மீது எந்த குற்றமும் இருக்காது. அவர்கள் நீதிமான்களாகவே இருப்பார்கள். தவிர்க்க முடியாத பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

அரசைப் பார்த்து மக்கள் பீதியடைவதற்கு இது ஒன்றும் ஆங்கிலேய ஆட்சி அல்ல - மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களைக் கொல்வது நியாயமல்ல.

தூத்துக்குடி சம்பவத்திலாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், ஆணையிட்ட அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைத்தால், அரசு எந்திரத்தின் மீது மக்கள் புது நம்பிக்கையை வைக்கத் துவங்குவார்கள். அல்லது பழைய அவநம்பிக்கையை மேலும் வளர்த்துக்கொள்வார்கள்.

இந்த சம்பவத்தில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மக்களுக்கு ஆதரவாக நிற்காமல், விலகி நின்றது ஆச்சரியம் அளிக்கிறது. வரலாற்றின் பக்கங்களை பொய்களால் நிரப்ப முடியாது என்பதை பத்திரிகைகளும் உணர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையைத்தான் பத்திரிகைகள் மீதும் வைத்திருக்கிறார்கள். காவல் துறை, நீதித் துறை, மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்தவர்கள் ஒன்று கூடி, பணம் பண்ண ஆரம்பித்துவிட்டால் ஜனநாயகத்திற்கு கேடு.

நீதிக்கு முன் எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்டாலும், மக்களுக்கும் அரசுக்கும் வேறு வேறாக இருப்பது நல்லதல்ல. செய்த சம்பவத்திற்கு தீவிரவாத அமைப்புகளே பொறுப்பேற்றுக் கொள்ளும் போது, ஒரு அரசு பொறுப்பேற்காமல் சமாளிப்பது தலை குனிவானது.

Comments