மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்


மக்கள் பார்த்தால் புடுங்குவார்களா என்ன? இதுதான் அரசியல்வாதி மற்றும் அரசு ஊழியர்களின் கேட்கப்படாத கேள்வியாக இருக்கிறது. முன்பெல்லாம் மக்களைப் பார்த்து இவர்களுக்கு அச்சம் இருந்தது. தவறுகளை மறைவாக செய்துகொண்டிருந்தார்கள். லஞ்சம் வாங்குவது கூட ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் வாங்குவார்கள். இப்போது அப்படியல்ல., எல்லாம் மாறியிருக்கிறது. மக்களுக்கு முன், மக்களையே கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் லஞ்சத்தை ஆன்லைனில் தரலாம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் சின்னச் சின்னதாக தவறு செய்ய ஆரம்பித்த போதே, நீதிக்காக போராடியிருக்க வேண்டும். மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவு, இன்று நீதியின் இருக்கையில் அநீதியின் ஆலமரமாய் பரந்து விரிந்து வளர்ந்து நிற்கிறார்கள். சின்னதாக ஒரு போரட்டத்தை துவங்கினால் கூட அவர்களால் தாங்க முடியவில்லை. இளகிய மனசு கொண்டவர்களாக இருக்கிறார்கள்., உடனே காவல்துறையை அனுப்பி தாக்குகிறார்கள்.

சமீப காலமாக இவர்கள் மக்களை சுத்தமாக மதிப்பதில்லை., போகட்டும். சட்டத்தையாவது மதிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஆனால்… நம்மை சட்டத்தை மதித்துத்தான் ஆக வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள்.  அநீதியாளர்கள் நீதி பேசுவது ஏற்கக் கூடியதல்ல. ஆனால்… அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது.

காவல்துறையும், நீதி மன்றமும் ஏழைகளுக்கு மட்டுமா இயங்கிக் கொண்டிருக்கிறது? பலவீனமானவர்களிடம் நீதி பேசும் அவர்கள், பலமானவர்களிடம் பேசுவதில்லை.

மக்கள் அரசின் எல்லா துறையின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அரசு இயந்திரத்தின் பகுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகிறது. அதை பழுது பார்ப்பதை விட்டுவிட்டு, கேள்வி கேட்பவனிடம் வாயில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறு பேசியதாக சூர்யதேவி என்ற சாதாரண பெண்ணை காவல்துறையினர் நான்கே நாளில் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். பிறகு அவரைப் பற்றிய செய்தி எந்த ஊடகங்களிலும் வரவில்லை. அவர் நீதிமன்றம் வந்தாரா? உயிரோடுதான் இருக்கிறாரா? தெரியவில்லை. ஆனால்… பத்திரிகையாளரை அவதூறு பேசிய பிஜேபி பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரை இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் இவர்கள் கைது செய்யவில்லை. அவர் 10.6.2018 அன்று நடந்த தயாரிப்பாளர் சங்க (கில்ட்) தேர்தலுக்கு வந்து சாவகாசமாக ஓட்டுப் போட்டுவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிகழ்வு நாங்கள் நீதி மீறி நடக்கிறோம்., உங்களால் என்ன புடுங்க முடியும்? என்று அரசு மக்களிடம் பகிரங்கமாகவே கேட்பதாக அர்த்தம்.

தூத்துக்குடி கலவரத்தில் கல்வீச்சு, தீ வைப்பு மற்றும் அரசு சொத்தை சேதம் செய்தவர்களை, அங்கே எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து, அவர்களை கண்டறிந்து கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

அதே வீடியோ காட்சிகளிலும் புகைப்படங்களிலும் காவல்துறையினர் சட்டத்தை மீறி மக்களை கொன்று குவித்திருப்பதும் பதிவாகியிருக்கிறது. ஆனால்… அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சுகமாக இருக்கிறார்கள்.

அரசு சொத்தை சேதப்படுத்தியவர்களிடமிருந்து அதை திரும்ப மீட்கலாம். ஆனால்… இறந்த மக்களை இந்த அரசால் திரும்ப மீட்க முடியுமா? இளமையில் அடியெடுத்து வைத்திருந்த பெண் ஸ்னோலினையும் அவள் லட்சியங்களையும் இந்த அரசால் மீட்டுத்தர முடியுமா?

உயிரற்ற கட்டடங்கள், வாகனங்கள், சாலைகள், கடல், மலை, காடு எல்லாம் அரசு சொத்து. மக்கள் அரசு சொத்தில்லையா? அந்த சொத்தை அரசு பாதுகாக்க வேண்டாமா? அரசின் சொத்தை அரசே அழிக்கலாமா? அது குற்றமில்லையா?

ஒரு நாட்டின் முதல் முக்கியமான சொத்தே மக்கள்தான். அவர்களை அரசு பாதுகாப்பதை விட்டுவிட்டு, தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இது தேசநலனுக்கு ஆரோக்கியமானதல்ல.

தூத்துக்குடி கலவரத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோ காட்சிகளில் ஒரு விஷயம் தெளிவாக பதிவாகியிருந்தது. பல காவல்துறையினர் சூழ்ந்து நின்று ஒருவரை ஆயுதங்களால் தாக்கும்போது கூட, அந்த ஒருவர் துணிச்சலாக நின்று முறைப்பதும், அடிவாங்குவதுமாக நிற்கிறார். அது வீரத்தைக் குறிக்கிறது. அச்சமின்மையை குறிக்கிறது. சட்டத்தை மட்டுமே மதிப்பதை குறிக்கிறது. அந்த மதிப்பை அரசு வன்முறையால் பாதுகாக்க முயற்சித்தால், மக்கள் அந்த இடத்திலிருந்து நகரத்துவங்குவார்கள். அது சிக்கலின் துவக்கமாக அமையும்.

இந்த சம்பவமே கூட நகரத்துவங்கியதின் அடையாளமாக இருக்கலாம். ஏன் என்றால்… தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை பழிவாங்கப் போவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த வன்முறை தொடந்தால் மாற்று வழிக்கு நீங்களே பாதை அமைக்கிறீர்கள் என்று பொருள். மக்களைக் கொன்றுவிட்டு, மக்களுக்கு நடுவே நீங்கள் எப்படி மறைந்து வாழ முடியும்? யோசித்துப் பார்த்தீர்களா?

இனியாவது நீங்கள் சட்டத்திற்கும், உயிர்களுக்கும் மதிப்பளியுங்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Comments

  1. Casino and Golf Club - Mapyro
    Casino and 광명 출장마사지 Golf Club At Casino and Golf 양주 출장샵 Club in Yonkers (N.J.), the most reliable place for accurate 유로 스타 사이트 and unbiased reviews 광양 출장마사지 of casino and 제주도 출장안마 golf courses in

    ReplyDelete

Post a Comment