உலகை உலுக்கிய வார்த்தைகள்



வரலாற்றில் பலரின் வார்த்தைகள் உலகை உலுக்கியிருக்கிறது. அவை மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டுவர சிறந்த தலைவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள். அதில் நடிகர் ரஜினிகாந்தின் வார்த்தைகளை சேர்க்க வேண்டியதில்லை. ஏனென்றால்… இவை மோசமான தலைவரால் மக்களுக்கு எதிராக பேசப்பட்டவை.

சமூக விரோதிகள் என்ற வார்த்தைகள் ரஜினியின் திரைப்பட சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது. இங்கே தாங்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்பதை ரஜினிக்கும் இன்னும் பல கோமாளி தலைவர்களுக்கும் உணர்த்தியிருக்கிறார்கள் மக்கள்.

காலா திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகள் அரங்கு நிறையவில்லை. பேனர்கள், கொடிகள் என்று ரஜினி ரசிகர்களால் திரையரங்கங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை கோலாகலம் என்ற தோன்றத்தை தர முயன்றன. என்றாலும்… ரஜினி படத்திற்கான கொண்டாட்டம் காணப்படவில்லை. மாஸ் தொலைந்தது. ஆனால்… திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டதாக ஊடகங்கள் பொய் சொன்னது.

உண்மையில் திரைப்படத்தின் நிலை பரிதாபத்துக்குரியது. பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. திண்டிவனம் மீனாட்சி திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்கள் மொத்தம் ஐம்பது பேர், அதில் பதினொன்று பேர் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர். சேலத்தில் ஏழேகால் கோடி கொடுத்து படத்தை வாங்கியவருக்கு ஒரு கோடி கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் மூன்று அல்லது மூன்றரை கோடியை எட்டலாம். எப்படியும் மூன்று கோடி நஷ்டம்.

கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்ற கார்ப்பரேட் கம்பெனிகளும் காலா படத்தின் டிக்கட்டுகளை வாங்கவில்லை. காரணம் தூத்துக்குடி மக்களுக்கு எதிராக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை அவர்கள் ஏற்கனவே யூகித்திருந்தார்கள்.

நூறு ரூபாய் மதிப்புள்ள டிக்கட்டுகளை, ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு விற்கலாம் என்று ஐநூறு ரூபாய்க்கு வாங்கிய ஏஜென்டுகளும் வாங்க ஆட்கள் இல்லாததால் நஷ்டமடைந்தார்கள்.

சென்னையில் முக்கியமான இரண்டு தியேட்டர்கள் உதயம் மற்றும் கமலா. இவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்க முடியாதென்று படத்தை திரையிட மறுத்துவிட்டன.

பல வெளிநாடுகளில் தமிழர்கள் காலாவை புறக்கணித்திருக்கிறார்கள். அதனால் மேலும் கோடிக்கணக்கில் நஷ்டம்.

கர்நாடகாவில் காலாவுக்கு நீதிமன்ற உத்தரவு வாங்கி வெளியிடப்பட்டது. காவல்துறை பாதுகாப்புடன் படம் ஓடியது. எதிர்ப்பு அதிகம் இருந்ததால் வெற்றி கிடைக்கவில்லை.

காலா படத்தை தயாரித்த நடிகர் தனுஷ், ஒரு தயாரிப்பாளரின் தகுதியில் இருந்து கீழே இறங்கி, பணம் சம்பாதிக்கும் வெறியில் சென்னையிலுள்ள காசி மற்றும் ரோகிணி காம்ளக்ஸ் திரையரங்குகளின் டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்க அவரே ஒதுக்கி வைத்திருந்தார். வாங்க ஆள் இல்லாததால் அதிலும் நஷ்டம்.

சமூகவிரோதிகளுக்கு (தூத்துக்குடி மக்கள்) தன்னுடைய திரைப்படத்தைக் காட்டி, பணம் சம்பாதிப்பதற்கு ரஜினி வெட்கப்படவில்லை. பணம் எங்கிருந்து வந்தாலும் அவர் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. தூத்துக்குடியில் காலாவின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. படம் ஓட வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செய்துவிட்டே படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு அரசியல் புரியவில்லை என்றாலும் பெரும்பான்மையான மக்கள் படத்தை நிராகரித்துவிட்டார்கள். அங்கேயும் பெரும் நஷ்டம்தான். ஆனால்… ஊடகங்கள் தெளிவான எந்த தகவலையும் தரவில்லை.

காலா திரைப்படத்திற்கு இப்படி தொடர்ச்சியான நஷ்டங்கள். இந்த நஷ்டங்களால் படத்தின் தயாரிப்பாளர் தனுசோ, நடிகர் ரஜினியோ சாப்பாட்டிற்கு கஷ்டப்படப் போவதில்லை. அவர்களிடம் பல தலைமுறைக்கு பணம் கொட்டிக் கிடக்கிறது.

இந்த நஷ்டங்கள் எல்லாமே ரஜினியின் வார்த்தையால் ஏற்பட்டவை. வாழ்வதற்காக போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று பழி சுமத்தியதால் ஏற்பட்டவை. தமிழ் மக்களின் மனதை நோகடித்ததால் ஏற்பட்டவை. தமிழ் மக்களின் கோபத்தால் ஏற்பட்டவை.

வார்த்தையின் கூர்மை அறியாதவர்கள் தலைவராகும் தகுதி இல்லாதவர்கள். இப்போது ரஜினிகாந்த் வார்த்தையின் கூர்மையையும், தமிழ் மக்களின் எண்ணத்தையும், சக்தியையும் புரிந்துகொண்டிருப்பார்.

தனக்கும் தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்த நடிகர் ரஜினிகாந்த், உயிர் வாழ்வதற்காக போராடிய மக்களை சமூகவிரோதிகள் என்று சொன்னது, அவருடைய சினிமா வாழ்க்கையை அசைத்துக் காட்டியிருக்கிறது. ரஜினியின் வார்த்தைகள் தமிழ் மக்களை உலுக்கியது. இப்போது தமிழ் மக்கள் ரஜினியை உலுக்கியிருக்கிறார்கள்.

அவர் தமிழ் மக்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டது, அசாதாரணமாக முடிந்திருக்கிறது.

Comments