அன்பற்ற ஆறுதல்கள்



இன்று (30.5.2018) இந்திய நிகழ்கால பிரதமர் மோடி முதல் கட்டமாக இந்தோனேசியா செல்கிறார். காரணம் கிழக்காசிய நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேணவும், வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும்.

அதே நேரம் எதிர்கால பிரதமர் ரஜினிகாந்த், ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்கிறார். காரணம் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனவர்கள் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் சொல்ல. ஏற்கனவே கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடியில் ஆறுதல் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆறுதல்கள் இழந்தவைகளை மீட்டுத் தருமா என்ன? இது ஒரு விபத்தாக இருந்தால் ஆறுதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. திட்டமிட்ட சதியை ஆறுதல்களால் மீட்டெடுக்க முடியாது. இது அன்பற்ற ஆறுதல்கள்.

போராட்டக்களத்தில் ரஜினி இருந்திருந்தால், அரசு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு யோசித்திருக்குக்கும். அப்படியே நடத்தி, ரஜினிக்கு ஏதாவது ஆகிவிட்டால், கலவரம் தமிழ்நாடு முழுவதும் பரவும் என்று அரசு அச்சப்படும். இந்த துப்பாக்கிச் சூடு கூட நிகழ்ந்திருக்காது.

மருத்துவமனையில் ஒரு இளைஞர் நீங்கள் யார்? நூறு நாட்கள் போராடினோமே அப்போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் என்று ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அந்த தலைகுனிவை சிரித்துக்கொண்டே சமாளித்து சென்றிருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக காலியான ரோட்டில் காரில் வந்து ஆறுதல் வழங்கும் ரஜினிக்கு தூத்துக்குடி மக்கள் ஓட்டு போடுவார்களா என்ன?

அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளாக நினைப்பவர்களும் மக்களை முட்டாள்களாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால்… பதிமூன்று மரணங்களுக்குப் பிறகும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்ட தூத்துக்குடி மக்களை அப்படி நினைத்துவிட முடியாது. அடுத்த தேர்தலில் அந்த மக்களின் முடிவு தெரியும்.

தகுதியற்றவர்கள் தலைவர்களாவது நமது நாட்டில்தான் எளிதாக நடந்துவிடுகிறது. அதற்கு காரணம் நாம்தான். பணத்திற்கு ஆசைப்பட்டால் பிணமாவீர்கள் என்பதை அரசு கற்றுத் தந்திருக்கிறது. இனி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்வோம்.

இந்திய பிரதமர்களில் அதிக நாடுகளை சுற்றிப் பார்த்த பெருமை நரேந்திர மோடியைச் சாரும். தேச ஒன்றுமை, தேச நலன், தொழில் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, நட்புறவு என்று அந்த பயணங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால்… இந்தியா வளர்ந்தபாடில்லை.

தினம் தினம் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக ஏறியிருக்கிறது. பஸ் கட்டண உயர்வால் மக்கள் வண்டி வாங்கினார்கள். இனி மாட்டு வண்டி வாங்க வேண்டும் போலிருக்கிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாத பிரதமர் மோடி உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்தியா வளர்கிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருக்கும் அவரும் மக்களை முட்டாளாகத்தான் நினைக்கிறார். வளர்ச்சியை மக்கள் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கருத்தை மோடி பின்பற்றுகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வெளிநாடுகளுக்கு நட்புறவை வளர்க்கச் செல்லும் மோடி, உள்நாட்டில் நட்பை பேண மறுக்கிறார். தூத்துக்குடி மக்களைக் குறித்து அவர் கொஞ்சம் கூட வருத்தம் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் நமது பிரதமராக இருக்கிறார்.

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு மோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால்… தூத்துக்குடியில் நடந்தது அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்களுக்காக அவர் பிரார்த்தனை செய்கிறார். எல்லாம் நாம் கொடுக்கும் பணத்தில்.

சாப்பிட ஆரோக்கியமான உணவு, உடுத்த விலை உயர்ந்த உடை, தங்குவதற்கு சொகுசான விடுதி, சிறந்த சம்பளம் மேலும் உலக பயணங்கள். இது எல்லாவற்றையும் நாம் பிரதமர் மோடிக்கு கொடுக்கிறோம். ஆனால்… அவரோ இது எதுவும் நமக்கு கிடைக்காமல் செய்கிறார். அதுவும் நாம் உயர்தரமாக கேட்கவில்லை. அடிப்படையைக் கேட்கிறோம்.

இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் பார்க்காத உலக நாடுகளே இருக்காது. அதற்குப் பிறகு அவர் செல்வதற்காக புதிய நாடுகளை நாம்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும்.        

Comments