நாம் நம் நாட்டில்தான் வாழ்கிறோமா?


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு அதறப் பழசான ஒரு பழமொழி உண்டு., கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைத்திருக்கிறது தமிழக அரசு. இது போராட்டக்காரர்களுக்கு நீதியை மீட்டுத் தருவதாக நம்ப வைக்கும் முயற்சி.

மத்திய அரசு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது. இது இன்று ஒரு தகவல்.

இங்கே மக்களாட்சி நடக்கிறதென்று சொல்லும் அரசியல் அமைப்பு, மக்கள் சொல்வதை கேட்காமல், ஒரு முதலாளிக்கு ஏன் துணை போகவேண்டும்? அது பற்றி எல்லோரும் அறிந்ததுதான்., லஞ்சம்.

ஒரு சிறந்த மக்களுக்கான அரசு, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதித்திருக்காது. அதையும் தாண்டி அனுமதித்துவிட்டது. அந்த ஆலை நிர்வாகம் கோடி கோடியாக லாபம் சம்பாதித்தாகிவிட்டது. இப்போதும் மக்கள் வேண்டாம் என்று போராடுகிறார்கள். அதற்கு மதிப்பளித்து மூடியிருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு சரியான பேச்சுவார்தையாவது நடத்தியிருக்கலாம். அதைச் செய்யாமல் மக்களை அலட்சியப்படுத்தி, கொன்று குவித்திருக்கிறது அரசு. இந்த செயல், நாம் நம் நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

நமது சொந்த நாட்டில், அரசு என்ற பெயரில், நம்மையே கொன்று குவிக்கும் இவர்களை என்ன செய்வது? நம்மை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே இந்த குற்ற செயலை செய்திருப்பதால்… இனி நாம் யாரிடம் போவது?

நீதி மன்றத்திடமா? அது தன் மதிப்பை இழந்து நீண்ட ஆண்டுகள் ஆகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயல்லிதா மூட உத்திரவிட்ட ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம்தான்.

பசுமை வாரியத்திடமா? இந்த ஆலையை தமிழ்நாடு பசுமை வாரியம் தடை செய்ய, தேசிய பசுமை வாரியம் அனுமதியளித்தது. இதெல்லாம் ஒரு கேலிக் கூத்தாக இல்லையா?

இதற்கு முன் அமைத்த தனி அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்பின் நடவடிக்கைகள் எல்லாம் நீர்த்துப் போயிருக்கின்றன. அடுத்து இருப்பது கிராம சபை. இது வட மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் இதே வேதாந்தா (ஸ்டெர்லைட்) ஆலையை மூடியிருக்கிறது. கேரளாவில் கூட கொக்கோ கோலா ஆலையை எதிர்த்து வென்றிருக்கிறது கிராம சபை. தமிழ்நாட்டில் வெற்றி பெறுமா? ஏனென்றால்… இந்திய அரசையும், தமிழக அரசையும், மாவட்ட ஆட்சியாளர்களையும், கிராம சபையில் பாதிபேரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருக்கிறது – வாங்கும். இந்த சூழலைத் தாண்டி ஒரு சாமான்யன் வேறு எங்கு போவான்? என்ன செய்வான்? ஒன்றுமே செய்ய முடியாத நிலை. போராட்டத்தால் கொலை செய்யப்படும் சாமான்யன், மீண்டும் ஒரு போராட்டத்தைத்தான் முன்நிறுத்த முடியும். அந்த போராட்டத்தின் நிலை? மீண்டும் முதலில் இருந்து துவங்கும்.

எனக்கு எழுதவே கழைப்பாக இருக்கிறது. அதனால்ஒரு கதையை உங்கள் முன் வைக்கிறேன். அது கொஞ்சம் இலகுவாக இருக்கும்.

ஒரு நாட்டில் மாபெரும் முட்டாள் ஒருவன் இருந்தான். அவனுக்கு கொலை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அதற்கான தைரியம் அவனிடம் இல்லை. அதனால் வேறு ஒருவரிடம் அந்த காரியத்தை ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தான். அதற்கான ஆளைத் தேடினான். யாரும் கொலை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. என்றாலும்… அந்த ஊரிலிருந்த முதியவர் ஒருவர் ஒரு அலோசனையை வழங்கினார்.

பக்கத்து ஊரில் ஒரு கூட்டம் பதுங்கி வாழ்வதாகவும். அவர்களுக்கு கொஞ்சம் கூட இரக்கம் என்பதே கிடையாது. அவர்கள் பணத்திற்காக தன் சொந்த தாயைக் கூட கொல்வார்கள். அவர்களிடம் சென்று உன் கோரிக்கையை வை என்று அனுப்பி வைத்தார்.

அந்த முட்டாளும் தன் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொண்டு, பக்கத்து ஊருக்குப் போனான். கொலைகாரக் கூட்டத்தில் ஒருவனிடம் ஒரு கவரையும், பணத்தையும் கொடுத்துவிட்டு வந்தான்.

கவரை பிரித்துப் பார்த்த கொலைகாரனுக்கு அதிர்ச்சி. கவரிலிருந்த புகைப்படத்தில், அந்த முட்டாள்தான் இருந்தான். அவனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, என்னைக் கொல்ல எனக்கு தைரியம் இல்லை. அதனால் உன்னை நியமித்திருக்கிறேன். நீ உன் வேலையை செய் என்று சொன்னான் அவன்.

இப்படி ஒரு முட்டாள் எங்கே இருக்க முடியுமென்று உங்களுக்குத் தோன்றும். அவன் இந்தியாவில்தான் இருக்கிறான்.

அது வேறு யாரும் அல்ல., நீங்களும் நானும்தான். நம்மை கொல்வதற்கு ஓட்டுப் போட்டு நாமே கொலைகாரர்களை நியமிக்கிறோம்.

இனியாவது வாக்குரிமையை என்ன செய்ய வேண்டும் என்பதை சரியா தீர்மானிப்போம்.

Comments