இருட்டு அறையில் முரட்டு குத்து


எண்பதுகளில் இளைஞர்கள் ரகசியமாக பேசிக்கொள்ளும் சமாச்சாரம்தான் இந்த தலைப்பு. அது இப்போது சினிமாவாக தயாரிக்கப்பட்டு பகீரங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல் வசூலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திரையரங்கத்தில் மக்கள் அலைபோதுகிறார்கள். இதிலிருந்தே மக்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். மனிதன் தோன்றியதிலிருந்து கூடவே காமமும் தோன்றிவிட்டது. அதற்காக பகீரங்கமாக பொது இடத்தில் செய்யலாமா? என்று கேள்வி வைத்தால், இந்த தலைமுறை ஆமா என்று பதில் சொல்லுமா என்பது தெரியவில்லை.

இந்த தலைமுறைக்கு மிக சாதாரணமாக கிடைப்பது காமம். அதனால்தான் அதை மறைத்து வைக்காமல், பொதுவாக வெளிப்படுத்துகிறதா என்பதும் தெரியவில்லை. சமூக வலைத்தளங்கள் பெருப்பாலும் காமத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

எண்பதுகளில் ஒரு பெண்ணின் கடைக்கண் பார்பை படவே இரண்டு ஆண்டுகள் ஆகும். பிறகு காதலைச் சொல்லி, கொண்டாடி, காமத்திற்கு போவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகிப்போகும். அனேகமாக அதற்கு முன் அந்தக் காதல் தோற்று போகும். அப்படியே வெற்றி பெற்றாலும் ஒரு இடம் கிடைப்பது கடினம். அதை கடினமென்று மட்டும் சொல்லிவிட முடியாது. கடினமோ கடினம்.

பெண்ணை கூட்டிச் செல்வதை ஊர் பார்த்துவிடக் கூடாது. வீட்டில் உள்ளவர்கள் பார்த்துவிடக் .கூடாது. சொந்தக்காரர்கள் பார்த்துவிடக் கூடாது. ஒருவேளை அப்படி நடந்தால்… அதோடு எல்லாம் முடிந்தது. பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ வீட்டுக்கு அழைத்துச் செல்வதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மற்றவர்களுக்குப் பயந்தாவது கலாச்சாரம் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

இன்று எல்லாம் மாறியிருக்கிறது. கால மாற்றம், நாகரீகம் அல்லது இயலாமை என்ற பெயரில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. யாரும் யாரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். இடம் ஒரு விஷயமில்லை.

பெரியவர்கள் இவர்களைக் கண்டும் காணாமல் இருக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் வளர்ப்புத்திறன் இல்லாததாக இருக்கலாம் அல்லது கார்ப்பரேட்டுகளால் சிதைக்கப்பட்ட கலாச்சாரத்தை இனி இழுத்துப் பிடிக்க முடியாது என்ற அறிவாக இருக்கலாம். இல்லையென்றால் தாங்கள் சம்பாதிக்க முடியாத பணத்தை அவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதாகவும் இருக்கலாம்.

எப்போதுமே காமத்தை நாகரீகமாக சொல்லும் வார்த்தைதான் காதல். அதைச் சொல்ல இப்போதெல்லாம்… ஒரு வினாடி போதுமானது. வாட்சப்பில் வருகிறாயா? என்று ஒரு வார்த்தையைப் போட்டால் போதுமானது. அடுத்த வினாடி முடிவு தெரிந்துவிடும். காத்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும்… காமத்தை சமூகத்திற்கு முன்பாக செய்வது சரியா என்பதே கேள்வி.

முப்பது வயதிற்குள் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, மீதியிருக்கும் வயதை இந்த தலைமுறை என்ன செய்யும் என்ற கேள்வியும் தோன்றுகிறது. அது அவர்கள் யோசிக்க வேண்டிய பிரச்சனை. நாம் யோசிப்பதால் என்ன பயன்?

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்தப் படம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று தெளிவாக சொல்கிறார். ஆனால்… திரையரங்கத்தில் பாதி பேர் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

இதுவே கேரள மாநிலமாக இருந்தால் தியேட்டர் நிர்வாகமே சமூக பொறுப்போடு நடந்துகொள்ளும். தமிழ்நாட்டில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்று தியேட்டர் நிர்வாகம் சொல்லி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது.

லஞ்சமும் ஒழுங்கீனமும் பெருகிய தமிழ்நாட்டில் எல்லாமே நிகழும். ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. நாம் தேர்ந்தெடுக்காத முதலமைச்சர் ஒருவரை நாம் வைத்துக்கொண்டிருக்கவில்லையா என்ன? அது போலத்தான் இதுவும்.

பல திரைப்படங்கள் கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்னும் அடிப்படையில், சென்சார் போர்டால் வசனங்கள், காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால்… இந்த முழு திரைப்படத்தையும் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சென்சார் போர்ட்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்களோ இல்லையோ, அவர்களில் ஒருவர் கூட சமூக பொறுப்பு கொண்டவர் இல்லை என்பது தெளிவாகிறது.

Comments