ஜே வே போஸ்ட்


என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. ஆனால்... எனக்கு சொல்வதற்கென்று நிறைய உண்டு. அதைத்தான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உரிய நபரிடம் அனுமதி பெற்ற பிறகே, ஒருவரைப் பற்றி நான் இங்கு எழுதுகிறேன். அதனால் யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. சில மனிதர்கள் தங்கள் வாழ்வை திறந்த புத்தகமாகவே வைத்திருக்கிறார்கள்., நாம் படிப்போம். புரிந்துகொள்வோம். எழுத்தை மட்டும் முன்னிறுத்திக் கொள்வோம்.

எழுதுவதற்கு எல்லோரிடமும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. சிலர் எழுதுகிறார்கள்., பலர் பேசுகிறார்கள். எழுதவும் பேசவும் முடியாத விஷயங்கள் கூட இருக்கிறது.

முன்பெல்லாம் எல்லாவற்றிற்கும் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதில் ஒரு சுவாரசியம் மறைந்திருந்தது. இன்று எதற்கும் காத்திருக்க வேண்டாம். எல்லாவற்றையும் வலைதளம் வேகமாக முடித்துவிடுகிறது. ஆனால்… சுவாரசியம்தான் இல்லை.

காதலும், கல்யாணமும், கருமாதியும் வினாடியில் முடிந்துவிடுகிறது. யோசிப்பதற்கு நேரம் இல்லை. பணம் சம்பாதிப்பதிலேயே வாழ்வு முடிந்து போகிறது. பணத்தை சேர்த்து வைத்துவிட்டு இறந்து போவதில் என்ன அர்த்தம் இருக்கிறதென்று தெரியவில்லை?

வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது. அதில் எல்லாம் இருக்கிறது., அதில் மட்டுமே எல்லாம் இருக்கிறது. அது நம்பிக்கையில் துவங்கி துரோகம் வரை செல்கிறது. இங்கே எதன் மீதும் எந்த கேள்வியும் வைத்துவிட முடியாது. வாழ்வை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது.

புரிந்துகொள்கிறேன் என்று முகத்தை உணர்ச்சியற்று வைத்துக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. கிண்டலும் கேலியும் கூட வாழ்க்கைதான்., அது எல்லை மீறாத வரை.

இன்று வெயில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன்பு மழை பிரச்சனையாக இருந்தது. இனி பனி பிரச்சனையாக இருக்கலாம். நாம் சுகமான வாழ்வைத் தேடுகிறோம். அது பணத்தால் உருவாக்கப்படுவதில்லை. ஆரோக்கியத்தால் உருவாகிறது.

நாம் ஆரோக்கியத்தை இழந்து பணத்தை சம்பாதிக்கிறோம். பிறகு பணத்தை இழந்து ஆரோக்கியத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம். நாம் இவ்வளவு முட்டாள்களாக எப்படி ஆனோம்? ரூம் போட்டு யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வீட்டுக்குப் பக்கத்தில் ரூம் போடாமல், வெளி ஊர்களில் ரூம் போடுவோம். அப்போதுதான் புதிய இடங்களையும், மனிதர்களையும் பார்க்க முடியும்.

பயணங்களும், சந்திப்புகளும் வாழ்வை மேலும் அழகாக்குகிறது. இன்று காரணமற்ற எந்த ஒரு பயணங்களும், சந்திப்புகளும் இல்லை. எல்லாம் வேலை காரணமாகவே நிகழ்கின்றன. ஒரு முறையாவது இலக்கற்ற பயணத்தையும், சந்திப்பையும் அடைந்து பாருங்கள். இதுவரை பார்க்காத வாழ்வின் கதவு திறக்க ஆரம்பிக்கும்.

நமக்கு சிறப்பானதை தருவதாகச் சொல்லி, வியாபாரிகள் எதையெல்லாமோ நம்மை வாங்கச் சொல்கிறார்கள். நாமும் மோகம் கொண்டு வாங்குகிறோம். அது நமக்கு சிறந்ததை தருகிறதா என்ன? இல்லை.  அது இருக்கும் சிறப்பை அழிக்காமல் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.

வியாபாரிகளே நாட்டையும் வீட்டையும் ஆள்கிறார்கள். பணம் மட்டுமே வெற்றியின் அடையாளமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. மனம் முக்கியத்துவம் பெறாமலே போய்விட்டது.

நாம் பொய்யைத்தான் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்பும் நாம் யார்? என்று கேட்டால்… யோசிக்காமல் பதில் சொல்லிவிடலாம்., நாமும் பொய்யர்கள்தான்.

எப்படி இருந்தாலும் வாழ்வின் அர்த்தம் வாழ்வுதான்.

சந்திப்போம்... சிந்திப்போம்…

Comments

  1. இலகியல் வே வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment